காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை
- மாண்டியாவில் 9 நாட்களாக பல்வேறு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
- தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சேலம்:
கர்நாடகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இதனால் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடவில்லை.
இதனால் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 293 கன அடி நீர் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் என மொத்தம் 4 ஆயிரத்து 293 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு 30-ந்தேதி முதல் கடந்த 7-ந்தேதி வரை 9 நாட்கள் சராசரியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் 9 நாட்களாக பல்வேறு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்றன.
இந்த நிலையில் கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் 8-ந்தேதி தண்ணீர் திறப்பை கர்நாடக அரசு நிறுத்தியது. குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடுகிறது. நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,678 கன அடி உபரிநீர், கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் என மொத்தம் 2,778 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து இன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,684 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 97.74 அடியாகவும், நீர்வரத்து 2741 கன அடியாகவும் உள்ளது. கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 76.08 அடியாகவும், நீர்வரத்து 4,605 கன அடியாகவும் உள்ளது.
இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படுகிற தண்ணீர் முழுவதும் முறையாக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதிக்கு வந்து சேருகிறதா? என மத்திய நீர்வளத்துதுறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் முழுவதும் தமிழக எல்லைக்கு வந்து சேருவது கடினம்.
மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 670 கன அடியாக இருந்த நிலையில் இன்று வெகுவாக சரிந்து வினாடிக்கு 392 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 45.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 45.01 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் மேலும் குறைந்து 44.06 அடியானது. நீர்மட்டம் தினமும் 1 அடி வீதம் குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பை சுட்டிக்காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், காவிரியில் மேலும் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை கண்டித்து மாண்டியாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விவசாய சங்கத்தினர் நேற்று மாலை பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை நடுவே டயர்களை கொளுத்திப்போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஸ்ரீரங்கப்பட்டணாவில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.