தமிழ்நாடு

கனல் கண்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-08-11 16:52 GMT   |   Update On 2022-08-11 16:52 GMT
  • கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
  • பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும், கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று கனல் கண்ணன் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை. சிலையை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைதான் விடுக்கப்பட்டது. மனுதாரர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை" என்று வாதிடப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜி.தேவராஜன் வாதிட்டார். "மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மோதலை உருவாக்கும் விதமாக மதங்களை பற்றியும் பேசியுள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News