தமிழ்நாடு

துணிவு, சாகச செயலுக்காக கீழ்வேளூர் எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் வழங்கினார்

துணிவு, சாகச செயலுக்காக கீழ்வேளூர் எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது

Published On 2022-08-15 06:16 GMT   |   Update On 2022-08-15 10:04 GMT
  • சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டது.
  • நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கு சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக விருது வழங்கப்பட்டது.

சென்னை:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மேல்வீதியை சேர்ந்த பா.எழிலரசி தனக்கு நீச்சல் தெரியாதிருந்த போதிலும் 2 குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.

கும்பகோணம் மற்றும் அம்மாள் சத்திரத்தை சேர்ந்த 2 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பாட்டியின் சடங்குக்காக தாத்தா வீட்டுக்கு வந்திருந்தனர். 3 குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடிக் கொண்டிருக்கும்போது 3 குழந்தைகளில் இருவர் தவறுதலாக அருகில் உள்ள குளத்தில் விழுந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவர்கள் கதறிய சத்தம் கேட்டு கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மேல்வீதி கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசி தனக்கு நீச்சல் தெரியாதிருந்தும் நீரில் மூழ்கிய குழந்தைகளைக் கண்டு அவர்களை மீட்கும் முயற்சியில் குளத்தில் இறங்கி கை கொடுத்து தன்னிச்சையாக செயல்பட்டபோது ஒரு கட்டத்தில் அவரும் குளத்தில் விழுந்துள்ளார்.

இருந்த போதிலும் 2 குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு வெகுநேரம் குளத்தில் மன உறுதியுடன் போராடினார். பின்பு அங்கு வந்த பொதுமக்களின் உதவியுடன் 3 பேரும் சிறிய காயங்களுடன் வெளியே வந்தனர்.

எழிலரசியின் வீரமான துணிவான செயலை பாராட்டும் விதமாக அவருக்கு 2022-ம் வருடத்திற்கான துணிவு மற்றும் வீர சாகச செயலுக்கான 'கல்பனா சாவ்லா' விருதை அரசு வழங்கி சிறப்பித்திருக்கிறது.

உங்கள் தொகுதியில் முதல்வர் விருது எஸ்.லட்சுமி பிரியாவுக்கு வழங்கப்பட்டது. லட்சுமி பிரியா முதல்வரின் முகவரித் துறையில் துணை ஆட்சியராகவும் பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலராகவும் பணியாற்றி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கற்சூளைகளில் கொத்தடிமை தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்களை மீட்டெடுத்து தொழில் முனைவோராக மாற்றி உள்ளதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் பெறும் வகையில் 'சிறகுகள்-செங்கல்கள்' திட்டத்தை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதற்காக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் பின்தங்கியவர்களாக உள்ள திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து நிலையான வளர்ச்சி இலக்கை அடைய எடுக்கப்பட்ட முன் முயற்சிக்காக செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரை 3 அடுக்குகளாக சுத்திகரித்து தரைமட்ட தொட்டியில் சேமித்து பல்வேறு வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துவதோடு மிகை மழை நீரை அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் உறிஞ்சு குழியின் மூலம் நிலத்தடியில் செல்லுமாறு கட்டமைப்புகளை வடிவமைத்து நிலத்தடி நீர் மட்டம் உயர செய்தமைக்காக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட நீர்பிடி மேலாண்மை முகமையில் இருந்த விவசாயிகளின் பங்களிப்பு தொகையான ரூ.4.5 கோடியில் 20 ஜே.சி.பி. எந்திரங்கள் வாங்கப்பட்டு நீர்நிலைகளை தூர்வாரி, அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுத்து ஏழை விவசாயிகளின் நிலங்களில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி விவசாயம் செய்யப்படாமல் இருந்த நிலங்களை விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததன் மூலம் நீர் நிலைகள் மற்றும் அரசு நிலங்கள் மீட்டெடுத்தலுக்காக சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கருவுற்ற தாய்மார்களின் உடல்நலனை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து அவர்களுக்கு தேவையான தரமான மற்றும் முழுமையான மருத்துவத்தை அளிக்க உதவும் வகையில் தாய் கேர் நெல்லை என்ற திட்டம் பொது சுகாதார அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு பேறுகால இறப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டமைக்காக அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

தமிழக விவசாயிகள் தேவையான நவீன கருவிகளுடன் கூடிய வேளாண் எந்திரங்களை எளிதாக வாடகை முறையில் பெற இணைய வழியில் பணம் செலுத்தி முன்பதிவு செய்ய ஏதுவாக இ-வாடகை கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலில் வேளாண் எந்திரமயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடையே உருவாக்கி உள்ளதோடு அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன் அடைந்ததை பாராட்டி தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறைக்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் காப்பகங்களில் வைத்து பராமரித்தும், உரிய முகவரி கண்டறிந்து குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்படுவதோடு உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செயப்படுகின்றது. சென்னை பெருநகர காவல் துறையின் இச்சீரிய முயற்சியினை பாராட்டும் வகையில் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டது. அதனை மேயர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டது. 2-வது பரிசு குடியாத்தம் நகராட்சிக்கும், 3-ம் பரிசு தென்காசி நகராட்சிக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிக்கு ரூ.10 லட்சமும், 2-ம் பரிசு கன்னியாகுமரிக்கு ரூ.5 லட்சமும், 3-ம் பரிசு சோழவந்தானுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டது.

ஆண்கள் பிரிவில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மரு.பெ.விஜயகுமாருக்கு சமுதாயத்திற்கு இவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. உக்ரைன் நாட்டில் நடந்த போரின்போது தமிழகத்தை சேர்ந்த 35 மாணவர்களுக்கு அரசுடன் இணைந்து போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து அவர்களை மீட்க உதவினார்.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மு.முகமது ஆசிக் என்பவர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய உதவியதற்காக விருது வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு காடு வளர்ப்பு பணியில் ஈடுபட்டதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்த குடியாத்தம் உள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட பாலாறு ஆற்றுப்படுகையில் 25 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் காடு வளர்க்கும் பணியை தொடங்கினார். மேலும் தனது சொந்த ஊரில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டு பராமரித்தும் வருகிறார்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கு சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக விருது வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர் பா.ஜெய் கணேஷ் மூர்த்தியை பாராட்டி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது.

புதுக்கோட்டையை சேர்ந்த ரெனோசான்ஸ் அறக்கட்டளை 30 ஆண்டுகளாக அறிவுசார் குறை உடையவர்களுக்கான சிறப்பு பள்ளி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மாவட்ட அளவிலான சிறப்பு ஒலிம்பிக் நடத்திய தடகள போட்டிகளில் 26 பதக்கங்களை பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. எனவே மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு பணிக்கான நீண்டகால சேவை செய்துவரும் இந்நிறுவனத்திற்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News