தமிழ்நாடு செய்திகள்

சின்னசேலம் மாணவி மர்ம மரணம்: பள்ளி தாளாளர்-ஆசிரியர்களை காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு

Published On 2022-07-26 14:46 IST   |   Update On 2022-07-26 14:46:00 IST
  • கைதான 5 பேர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு விசாரணையின்போது, எத்தனை நாள் காவலில் விசாரிக்க அனுமதி கிடைக்கும் என தெரியவரும்.

Tags:    

Similar News