சென்னை-ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
- ‘பிளக்ஸ் இந்தியா’ என்ற தனியாருக்கு சொந்தமான நிறுவன அலுவலகங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படுகிறது.
- ஒவ்வொரு இடத்திலும் 10 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சமீப காலமாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முறைகேடுகளை கண்டு பிடித்து வருகிறார்கள். மேலும் அந்த நிறுவனங்களின் பின்னணிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
'பிளக்ஸ் இந்தியா' என்ற தனியாருக்கு சொந்தமான நிறுவன அலுவலகங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படுகிறது. இந்த நிறுவனம் செல்போன் உதிரிபாகங்களை தயார் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் முறையாக வருமான வரி கட்டவில்லை. வருமானத்தையும் குறைத்து காட்டுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். பெருங்குடி, கந்தன்சாவடி, ஆவடி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் பிளக்ஸ் இந்தியா நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இன்று காலையில் சென்னையில் இருந்து மொத்தமாக புறப்பட்ட அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு இடத்துக்கும் சென்றார்கள்.
ஒவ்வொரு இடத்திலும் 10 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிறுவனத்தின் வருமானம் எவ்வளவு? எவ்வளவு கணக்கில் காட்டி உள்ளார்கள்? என்ற விவரங்களை கம்ப்யூட்டர்கள் மற்றும் கோப்புகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். சோதனை முடிந்த பிறகு தான் உண்மை தெரிய வரும் என்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியிலும் தொழிற்சாலை உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இங்கு தயாரிக்கும் பொருட்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.