கூரியர் நிறுவன அலுவலகங்களில் வருமான வரி சோதனை 2-வது நாளாக நீடிப்பு
- சென்னையில் உள்ள அலுவலகங்களிலும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
- சோதனை முழுமையாக முடிந்த பின்பே வரி ஏய்ப்பு எவ்வளவு நடந்துள்ளது என்பது தெரிய வரும்.
சென்னை:
புரபஷனல் கூரியர் நிறுவனம் இந்தியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 3500 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது.
இந்த நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை வருமான வரித்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் புரபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், பாரிமுனை, ஆழ்வார்பேட்டை, கிண்டி, மண்ணடி, கோயம்பேடு ஆகிய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை 8 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழகம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த வருமான வரி சோதனை நடந்தது. நேற்று இரவு வரை இந்த சோதனை நடந்தது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக புரபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நீடித்தது.
சென்னையில் உள்ள அலுவலகங்களிலும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்பே வரி ஏய்ப்பு எவ்வளவு நடந்துள்ளது என்பது தெரிய வரும்.