தமிழ்நாடு

தனியார் கட்டுமான நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

Published On 2022-07-21 10:18 GMT   |   Update On 2022-07-21 10:18 GMT
  • ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியில் சரவண பெருமாளுக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது.
  • வருமான வரித்துறை சோதனையால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செந்துறை:

மதுரை கோச்சடை விசாலாட்சி நகரைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன்கள் முருகப்பெருமாள் மற்றும் சரவணப் பெருமாள். இவர்களுக்கு சொந்தமான ஆர்.ஆர். இன்ப்ரோ கட்டுமான நிறுவனம் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுகுறிச்சி சாலையில் இவர்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலை கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நீடித்தது. அதன் பின் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போல திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி ஆகிய பகுதிகளில் இவர்களுக்கு சொந்தமான கிளை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.

இதன் மீது விசாரணை நடத்த இருப்பதால் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியில் சரவண பெருமாளுக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரி கடந்த ஓராண்டாக செயல்படாமல் உள்ளது. இந்த குவாரியில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி அம்பேத்கார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த பதிவேடு உள்பட அனைத்து ஆவணங்களையும் சோதனையிட்டனர்.

8 மணி நேரம் நடந்த இந்த சோதனையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று கைப்பற்றப்பட்டு ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால் தேனியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனையால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News