நாளை சுதந்திர தின விழா- கோவையில் விடிய விடிய வாகன சோதனை
- சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை:
நாடு முழுவதும் நாளை (15-ந் தேதி) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.
கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு, தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பை ஏற்று கொள்கிறார். இதனை அடுத்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.
இதில் காந்திமாநகர் அரசு பள்ளி அரசூர் அரசு பள்ளி உள்பட 10 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 350 மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வ.உ.சி. மைதானத்தில் விழா மேடை அமைக்கும் பணி, மைதானத்தை சீரமைக்கும் பணியும் நடக்கிறது. மோப்ப நாய் உதவியுடன், போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் 1500 போலீசார், புறநகரில் 1500 போலீசார் என மொத்தம் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். பஸ் நிலைய பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நேற்று ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகையும் நடைபெற்றது. ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலைய பகுதிகளில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரெயில் நிலைய மேடை, பயணிகளின் உடமைகள், பார்சல்கள் போன்றவற்றையும் சோதனை செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரெயில் நிலைய பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிகிறார்களா என்பதையும் கண்காணித்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை மாவட்ட முழுவதும் போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
மேலும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து, அதன் பின்னரே உள்ளே அனுமதித்தனர். இன்று காலையும் வாகன சோதனையானது நடந்து வருகிறது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக இருந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.