தமிழ்நாடு

அரிசி, மளிகை பொருட்கள் விலை உயர்வு

Published On 2024-02-04 03:05 GMT   |   Update On 2024-02-04 03:05 GMT
  • கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது.
  • அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது.

சென்னை:

மளிகை பொருட்கள் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் குடும்பத்தினரின் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும். அப்படி ஒரு நிலைதான் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்துதான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது. இதனால் அண்டை மாநிலங்களின் வரத்தை தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

அதேவேளை அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பருப்பு வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது.

அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது. பச்சரிசியும் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக அதிகரிக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,200-ல் இருந்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ சாப்பாடு அரிசியின் விலை ரூ.8 வரை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News