தமிழ்நாடு

உயர்பதவிகளுக்கு சென்று எங்கள் சமுதாயத்திற்கு பெருமை சேர்ப்பேன்- அரசுப்பணிக்கு தேர்வான திருநங்கை பேட்டி

Published On 2023-01-19 09:16 GMT   |   Update On 2023-01-19 09:16 GMT
  • ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.
  • தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எட்டயபுரம்:

திருநங்கையர்கள் வாழ்வில் முன்னேற தமிழக அரசு திருநங்கையர்கள் நலவாரியம் ஒன்றை அமைத்து அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு கிராம உதவியாளர் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அரசுப்பணி என்றால் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு அலாதியான விருப்பம் இருக்கும் சூழலில், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் திருநங்கையர் சமுதாயத்தில் இருந்து ஒருவர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திருநங்கை ஸ்ருதி கூறியதாவது:-

தலையாரிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் வந்துள்ளேன். இது எங்கள் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.

நான் மேன்மேலும் வளர்ந்து கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு செல்வேன். திருநங்கைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன். எங்கள் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News