ஓசூர் பட்டாசு கடை விபத்து: கட்டிட உரிமையாளர் கைது
- குடோனில் இருந்து நேற்று அதிகாலை மீண்டும் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.
- வெடி விபத்து தொடர்பாக பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் (43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் குடோன் இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை அந்த கடைக்கு பட்டாசுகள் லாரி மற்றும் பிக்அப் வேன்களில் வந்து இறங்கியது. அப்போது பட்டாசுகளை கடை, குடோன்களில் இறக்கும்போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு கடை, குடோனில் இருந்த 13 பேர் உடல் கருகி இறந்தனர். அவர்களின் உடல்களை நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
இந்த நிலையில் அந்த குடோனில் இருந்து நேற்று அதிகாலை மீண்டும் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனால் பட்டாசு கடை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இறந்த 14 பேரின் உடல்களும் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விபத்தில் கடை உரிமையாளர் நவீன், ராஜேஷ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் பெங்களூரு மடிவாளா செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையிலும், சஞ்சய், சந்துரு, ராஜேஷ், பால்கபிர் ஆகிய 4 பேரும் அத்திப்பள்ளி ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தொடர்பாக அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் நவீன் மற்றும் அவரது தந்தை ராமசாமி ரெட்டி, கட்டிட உரிமையாளர் அணில் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதில் நவீன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதால் அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்கள் மீது கவனக்குறைவாக செயல்படுதல், விபத்து மரணத்தை ஏற்படுத்துல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்து தொடர்பாக பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பட்டாசு கடை, குடோன் உரிமம் தொடர்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் செய்யப்பட்டிருந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.