தமிழ்நாடு

36 ஆண்டுகளாக நோன்பு திறப்புக்கான உணவுகளை வழங்கி வரும் இந்துக்கள்

Published On 2024-03-29 04:19 GMT   |   Update On 2024-03-29 04:19 GMT
  • இந்துக்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும் 'சிந்திஸ்' எனும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
  • உணவுப்பொருட்களை 25 வயது முதல் 86 வயதான தன்னார்வலர்கள் கொண்ட குழு பரிமாறுகிறது.

சென்னை:

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொள்வது வழக்கம். இதையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு திறக்கும் நேரமான மாலை நேரத்தில் நோன்பு கஞ்சி வழங்கப்படும்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

இங்கு நோன்பு கஞ்சியுடன், வெஜிடபிள் பிரிஞ்சி சாதம், வாழைப்பழம், திராட்டைப்பழம், குளிர்ந்த ரோஸ்மில்க், தண்ணீர் ஆகியவையும் சேர்த்து வழங்கப்படுகிறது. நோன்பு கஞ்சியை பொறுத்தமட்டில் பள்ளிவாசலில் இருந்து வழங்கப்படுகிறது.

இதை தவிர்த்து நோன்பு திறப்புக்கான மற்ற அனைத்து உணவு பொருட்களையும் கடந்த 36 ஆண்டுகளாக இந்துக்கள் வழங்கி வருகிறார்கள்.

இந்துக்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும் 'சிந்திஸ்' எனும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகிறார்கள். அகதிகளாக சென்னைக்கு வந்த இச்சமூகத்தின் மூதாதையர்கள் 'கடவுளுக்கு சேவை செய்வோம்... சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு சக மனிதர்களுக்கு சேவை செய்வோம்' என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு சென்னை மயிலாப்பூரில் சுபிதர் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி உள்ளனர்.

இவர்கள் வகுத்துள்ள குறிக்கோளுக்கு எடுத்துக்காட்டாக தங்களது அறக்கட்டளை வளாகத்தில் இந்து சாமிகள் மட்டுமல்லாமல் ஏசு கிறிஸ்து, மாதா, அந்தோணியார் சொரூபங்களையும் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் வழிபாடு செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

சுபிதர் அறக்கட்டளை மூலம் தான் 36 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் இவர்கள் நோன்பு திறப்புக்கான உணவுகளை வழங்கி வருகிறார்கள்.

இவர்களது மயிலாப்பூர் அறக்கட்டளையில் தயாராகும் நோன்பு திறப்புக்கான உணவு பொருட்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு மாலை 5.30 மணிக்கு பெரிய பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்த உணவுப்பொருட்களை 25 வயது முதல் 86 வயதான தன்னார்வலர்கள் கொண்ட குழு பரிமாறுகிறது.

நோன்பு திறப்பு நேரம் தொடங்கியதும் அல்லாவை வணங்கி நோன்பு திறப்புக்கான உணவு பொருட்களை அருந்துகிறார்கள். ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இந்த சேவை ஓசையில்லாமல் நடந்து வருகிறது.

மதத்துக்கு அப்பாற்பட்டு இந்த சேவையில் ஈடுபட்டு வரும் சுபிதர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராம்தேவ் நானி கூறும்போது, 'இந்த சேவையில் 36 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உள்ளார்ந்த அன்போடு இந்த பணியை அனைவரும் செய்து வருகிறோம். இது, எங்களுக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது. முஸ்லிம்கள் அணியும் குல்லாவை அணிந்து கொண்டு இந்த சேவையில் ஈடுபடுகிறோம்' என்றார்.

36 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் 86 வயதான நாராயண் என்பவர் கூறும்போது, இந்த சேவை தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தவறாமல் இந்த சேவையை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News