தமிழ்நாடு

மதுபானம் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருளா?- மதுரை ஐகோர்ட் கேள்வி

Published On 2023-03-24 03:42 GMT   |   Update On 2023-03-24 03:42 GMT
  • மேலையூர் நெடுஞ்சாலையில் மட்டும் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.
  • டாஸ்மாக் கடையினால் மோதல்கள் ஏற்பட்டு, போலீஸ்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.

மதுரை:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா வாகைக்குளத்தை சேர்ந்த ஞானதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் நாம் தமிழர் கட்சியில் உள்ளேன். எங்கள் கிராமத்தை சுற்றி செங்குளம், மேலையூர், புள்ளநாயக்கன்பட்டி, ராஜகோபாலபுரம், பாமாபுரம், செட்டிகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலான கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் கிடையாது.

மேலையூர் நெடுஞ்சாலையில் மட்டும் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி தகராறுகள் மற்றும் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. இதனால் அந்த கடையை மூடினர்.

தற்போது எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு இடையே டாஸ்மாக் கடையை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இந்த டாஸ்மாக் கடைக்கு வருகின்றனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.

இந்த டாஸ்மாக் கடையினால் மோதல்கள் ஏற்பட்டு, போலீஸ்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தியதால், பொதுமக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடை உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வேறு டாஸ்மாக் கடை கிடையாது என்றார்.

அதற்கு நீதிபதிகள், 20 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருளா? என கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த வழக்கு குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News