நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன மழை- குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
- இன்று கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமை சோமவாரம் என்பதால் குற்றாலம் மெயின் அருவிக்கரையில் பூஜைக்காக ஏராளமான பெண்கள் வந்திருந்தனர்.
- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் பலத்தமழை பெய்தது.
தென்காசி:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இன்று காலை வரையிலும் மழை நீடித்தது.
குறிப்பாக மாநகர பகுதியான பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. அங்கு 54 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பழையபேட்டை முதல் வழுக்கோடை, நயினார்குளம் சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் 15 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1017 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் 93.70 அடி நீர்இருப்பு உள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 83.40 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1608 கனஅடிநீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று காலையில் சிறிது நேரம் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு காணப்பட்டது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணைப்பகுதியில் 30 மில்லிமீட்டரும், குண்டாறு அணையில் 31 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இந்த 2 அணைகளும் நிரம்பிவிட்டதால், அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
கருப்பாநதியில் 62 அடியும், அடவிநயினார் அணையில் 81.25 அடியும் நீர் இருப்பு உள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 77 அடி நீர் இருப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால் நேற்று இரவு முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று காலை ஐந்தருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு சற்று தணிந்ததால் அதில் ஓரமாக நின்று குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்று கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமை சோமவாரம் என்பதால் குற்றாலம் மெயின் அருவிக்கரையில் பூஜைக்காக ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். ஆனால் குளிக்க அனுமதி கிடைக்காத காரணத்தினால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் பலத்தமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 10.8 சென்டிமீட்டர் மழை பெய்தது.திருச்செந்தூரில் 49 மில்லிமீட்டரும், கடம்பூரில் 55 மில்லிமீட்டரும் மழை கொட்டியது.
எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டனம், காயல்பட்டினம் மற்றும் கயத்தாறு பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.