தமிழ்நாடு செய்திகள்

கூடலூர், ஊட்டியில் கனமழை: மசினகுடி தரைப்பாலம் மூழ்கியது-போக்குவரத்து தடை

Published On 2022-07-14 09:17 IST   |   Update On 2022-07-14 09:17:00 IST
  • கனமழையால் மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • முதுமலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கூடலூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.

தொடர்மழையால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கொட்டி வரும் கனமழையால் அந்த பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

நேற்றும் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காலை தொடங்கி இரவு முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக மாறியது.

மழை காரணமாக பொன்னானி, மாயாறு உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழைக்கு கூடலூா்-மைசூரு சாலை, கூடலூா்-பெங்களூரு சாலை, கூடலூா்-நாடுகாணி சாலை, ஊட்டி-பந்தலூா் சாலை, ஊட்டி-எமரால்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் குறுக்கே 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் நடுவட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. மண்குவியல், குவியலாக ரோட்டில் கிடந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கேரளா, கர்நாடகா போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் காவல் துறையினா் மண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் சாலையின் இரு புறங்களிலும் பல கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன.

கனமழையால் மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முதுமலை அருகே மசினகுடியில் இருந்து தெப்பக்காடு பகுதியை இணைக்கும் பாலம் செல்கிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் வரத்து அதிகரித்து தரைப்பாலம் முழுவதும் மூழ்கியது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலத்தை தாண்டி உள்ள மக்களை அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் அக்கரைக்கு சென்று வருகின்றனர்.

மேலும் முதுமலை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை கூடலூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடுப்பு சுவா் இடிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 காா்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இதில் ஒரு காரில் இருந்த விசுவநாதன் என்பவா் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதேபோல் அப்பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு நபரும் காயமடைந்தாா். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தொடா் மழையின் காரணமாக மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாக்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News