தமிழ்நாடு

ஊட்டியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு மரம் ஒன்று வீடுகளின் மீது விழுந்து கிடக்கும் காட்சி

நீலகிரியில் சூறாவளி காற்றுடன் மழை- மரம் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதம்

Update: 2022-06-26 04:12 GMT
  • பலத்த காற்றுடன் மழை கொட்டியதால் முக்கிய சாலைகள், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
  • புதுமந்து சாலையில் நின்றிருந்த 2 மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் முக்கிய சாலைகள், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் அங்கு வசித்த மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

இந்த மழைக்கு ஊட்டி டம்ளர் முடக்கு பகுதியில் வீசிய சூறாவளி காற்று காரணமாக அங்கு நின்றிருந்த மரம் ஒன்று முறிந்து 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் 2 வீடுகளின் மேற்கூரையும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்வாள் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

புதுமந்து சாலையில் நின்றிருந்த 2 மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து மரத்தை துண்டு துண்டாக வெட்டி அகற்றினர்.

மேலும் இந்த பகுதியில் அபாயகரமான மரங்கள் அதிகமாக உள்ளதால், மழைக்காலத்தில் எந்நேரத்தில் வேண்டுமானாலும் விழக்கூடும். எனவே, அந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் அவதி அடைந்தனர். மேலும் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர்.

பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர். மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

ஊட்டி-கோத்தகிரி சாலை மற்றும் ஊட்டி-மஞ்சூர் சாலையிலும் மரங்கள் விழுந்தன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றபட்டன.

இதேபோல் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News