நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
நீலகிரியில் கொட்டி தீர்த்த மழை: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 6 இடங்களில் மண்சரிவு
- ராட்சத பாறைகள் பிடிமானம் இன்றி இருப்பதால் டிரைவர்கள், பயணிகள் அந்த வழியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.
- ஊட்டியில் காலையில் மழைக்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு மேட்டுப்பாளையம் சாலையில், 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், விரைந்து வந்து மண்சரிவை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சில இடங்களில் ராட்சத பாறைகள் பிடிமானம் இன்றி இருப்பதால் டிரைவர்கள், பயணிகள் அந்த வழியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்று மாலையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், ஓட்டுப்பட்டறை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல தெருக்கள் சேறும், சகதியுமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர். வாகன ஓட்டிகள் சிலர் மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி நின்றனர்.
இதற்கிடையே கனமழை பெய்வதால் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் இரவு நேரத்தில் முன்னெச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் காலையில் மழைக்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மதியத்திற்கு பிறகு திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது. ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.