தமிழ்நாடு செய்திகள்

நெல்லையில் பெய்து வரும் மழையால் குடை பிடித்து சென்ற பொதுமக்கள்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விடிய விடிய இடி-மின்னலுடன் கனமழை

Published On 2023-11-23 11:18 IST   |   Update On 2023-11-23 11:18:00 IST
  • விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மட்டுமல்லாது வயல்வெளிகளிலும் மழைநீர் தேங்கியது.
  • நெல்லை மாநகர பகுதியில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

நெல்லை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலை பல்வேறு இடங்களிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலையில் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு 9 மணியளவில் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பை, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை கொட்டியது.

விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மட்டுமல்லாது வயல்வெளிகளிலும் மழைநீர் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 50 மில்லி மீட்டரும், அம்பையில் 41 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 34 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் நம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நம்பி கோவில் செல்லவும், குளிக்கவும் அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.

நெல்லை மாநகர பகுதியில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக இரவு பணிக்கு செல்பவர்களும், வீட்டுக்கு திரும்பியவர்களும் மிகவும் சிரமம் அடைந்தனர். மாநகரில் நெல்லை, பாளை நகரங்களில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது.

பழைய பேட்டையில் தொடங்கி டவுன், ஸ்ரீபுரம், சந்திப்பு, வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பாளை, புதிய பஸ் நிலையம், சமாதானபுரம், கே.டி.சி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் இருந்தே மழை பெய்தது. மேலப்பாளையம் பகுதியில் தாழ்வான தெருக்களுக்குள் புகுந்த மழைநீர் வெளியேற வழி இல்லாமல் இருப்பதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 790 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று 104.45 அடியாக இருந்த நிலையில் இன்று 105.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 117.62 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 528 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறில் 39.4 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 24 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய கனமழை இன்று காலை வரையிலும் பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளில் விடிய விடிய இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் கடையநல்லூர், ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 13 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களிலும் தண்ணீர் தேங்கியது.

சாம்பவர் வடகரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 12 மணி நேரம் பெய்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அங்கு இடி-மின்னலுடன் பெய்த மழையால் சுமார் 70-க்கும் மேற்பட்ட டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் 3 மரங்கள் முறிந்து விழுந்தன.

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. கருப்பாநதி அணை பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கடனா அணையில் 10 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 50.80 மில்லிமீட்டரும் கொட்டியுள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. கடனா மற்றும் ராமநதி அணைகள் நீர்மட்டம் 77 அடியாகவும், அடவிநயினார் அணை 111 அடியாகவும் உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் குலசேகரபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. விடிய விடிய கனமழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வயல்வெளிகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தூத்துக்குடி மாநகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது, இதனால் நகரில் உள்ள தமிழ்ச்சாலை ரோடு, ரெயில்வே நிலையம் செல்லும் சாலை, ரெயில்வே தண்டவாளம், ரெயில்வே பணிமனை, வ.உ.சி.சாலை, ஜார்ஜ் ரோடு, பழைய மாநகராட்சி அலுவலக பகுதி, சுற்றுலா மாளிகை, சிவந்தாகுளம், லெவிஞ்சிபுரம், முத்தையாபுரம், ஸ்பிக் நகர் முள்ளக்காடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளான காடல்குடி, வைப்பாறு, சூரன்குடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளான மாதவன்குறிச்சி, கொட்டங்காடு, சிறுநாடார் குடியிருப்பு, தண்டுபத்து, ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர பகுதியில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. அதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாகவும், கனமழை எச்சரிக்கை இருப்பதாலும் 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் பிறிதொரு நாளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News