ஓசூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை தாசில்தார் கவாஸ்கர் வழங்கிய காட்சி.
ஓசூரில் விடிய விடிய கனமழை: மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த 15 குடும்பங்கள் சமத்துவபுரத்தில் தங்க வைப்பு
- முகாமில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
- ஓசூர் பகுதியில் கனமழை பெய்ததில், ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஏரியும் நிரம்பியது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. ஓசூர் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது.
இந்த மழையால் ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால், அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டனர்.
ஓசூர் அருகே சின்ன எலசகிரி, பேகேப்பள்ளி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளும் கனமழையால் வெள்ளக்காடாக மாறின.
ஓசூர் சமத்துவபுரம் அருகே தனியார் குடியிருப்பு பகுதிகளிலும், சமத்துவபுரம் எதிரில் உள்ள அனுமந்தபுரத்திலும் குடியிருப்புகளின் உள்ளே மழைநீர் புகுந்தது. முழங்கால் உயரம் தேங்கிய நீரில் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். மேலும் சாந்தபுரம் ஏரி நிரம்பியதால் உபரி நீர் கிராமத்திற்குள்புகுந்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர் அதிகரித்து உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத சூழலில் ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கியதுடன் மழைநீர் வடியும் வரை சமத்துவபுரத்தில் பாதுகாப்பாக தங்கவைக்க நடவடிக்கை மேற்கொண்டு உணவு தயாரித்து வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாசில்தார் சென்று அவர்களுக்கு உணவுகள் வழங்கி வருகிறார்.
ஓசூர் பகுதியில் கனமழை பெய்ததில், ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஏரியும் நிரம்பியது.
இதையடுத்து நேற்று மாலை முதல் விடிய விடிய இன்று காலை வரை ஓசூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.