தமிழ்நாடு செய்திகள்

கீழ்பவானி வாய்க்கால் பாதையில் சாய்ந்து விழுந்த மரம்.

ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை

Published On 2022-06-06 11:30 IST   |   Update On 2022-06-06 11:30:00 IST
  • ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
  • வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் மாலை 5 மணிக்கு பிறகு திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. குறிப்பாக மின்னல் பயங்கரமாக மின்னியது. ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதேப்போல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சி பகுதியில் 64 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் ஈரோடு- கரூர் மெயின் ரோட்டில் சாவடிப்பாளையம் அடுத்த ஆரியங்காட்டு ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் 2 அடி உயர அளவிற்கு மழை நீர் சென்றது. அப்போது ஈரோட்டில் இருந்து வந்த தனியார் பஸ் ஒன்று நுழைவு பாலத்தில் மழை நீர் வழியாக வந்தபோது பழுதாகி நின்று விட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கரூரில் இருந்து வந்த வாகனங்கள் மொடக்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

ஈரோட்டில் இருந்து வந்த வாகனங்கள் சாவடி பாளையத்திலிருந்து ஊத்துக்குளி வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். போக்குவரத்தை மொடக்குறிச்சி போலீசார் சீர்படுத்தினர். இதேபோல் ஈரோடு -முத்தூர் ரோட்டில் தொட்டிபாளையம் பகுதியில் வேப்பமரம் ஒன்று விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பொது பணித்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர்.

கீழ்பவானி வாய்க்காலில் சின்னச்சாமி புரம்என்ற இடத்தில் வாய்க்காலின் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வெப்பிலி குலவிளக்கு வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றனர். பொதுப்பணித்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி போக்குவரத்தை சரிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேப்போல் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதே போல் கவுந்தப்பாடி, சென்னிமலை, பவானி, அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம், பெருந்துறை, கோபி போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று பெய்த திடீர் மழையால் வெப்பமான சூழ்நிலை மாறி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்துள்ளது.இந்த அணையின் முழு கொள்ளளவு 33.5 அடியாகும்.

கடந்த வாரம் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பெய்த மழையினால் முழு கொள்ளளவை எட்டி உயிர் நீர் வெளியேறி வந்தது. மீண்டும் மழைப்பொழிவு இல்லாததால் முழு கொள்ளளவான 33.5 அடியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பர்கூர் மலை சுற்றுப் பகுதி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பொழிந்து உள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது 43 கன அடி உபரி நீர் வெளியேறிவருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

மொடக்குறிச்சி - 64, கவுந்தப்பாடி - 27, சென்னிமலை - 25, பவானி - 24, ஈரோடு- 19, அம்மாபேட்டை - 15, வரட்டுப்பள்ளம் - 14, பெருந்துறை - 11, கோபி - 7.4, நம்பியூர் - 7, தாளவாடி - 4, கொடிவேரி - 4, சத்தியமங்கலம் - 2, பவானிசாகர் - 1.2.

Tags:    

Similar News