மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் சாலை சீரமைக்கப்பட்ட காட்சி.
தொடர்ந்து கொட்டும் மழை- நீலகிரியில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு
- ஊட்டி அருகே அழகர் மலை கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.
- தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்கு மழை கொட்டி வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மண்சரிவும் ஏற்பட்டு சாலைகளும் சேதம் அடைந்துள்ளது.
ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கே.என்.ஆர். நகர், மரப்பாலம் இடையே ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்பட்டது.
ஊட்டியில் இருந்து நடுவட்டம், கிளன்மாா்கன், கல்லட்டி, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததாலும், ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை, தீயணைப்பு மற்றும் வனத்துறையினா் உதவியுடன் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் சரிவுகளும் அகற்றப்பட்டன.
ஊட்டி அருகே அழகர் மலை கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அங்கு வீட்டுக்கு முன்புறமும், பின்பும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அந்த வீடுகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி-எடக்காடு சாலையில் எமரால்டு பகுதியை அடுத்த காந்திகண்டி பகுதியில் சுமார் 200 அடி நீளத்துக்கு சாலையில் பெரிய அளவிலான பிளவு ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் வாகனங்கள் அந்த குழியில் விழுந்து விபத்து ஏற்படாத வகையில் எச்சரிக்கைக்காக அங்கு மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.