தமிழ்நாடு செய்திகள்

நீலகிரியில் கடும் பனிமூட்டம்-குளிர்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2022-11-09 12:15 IST   |   Update On 2022-11-09 12:15:00 IST
  • குன்னூர், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது.
  • பனிமூட்டம், குளிர் நிலவினாலும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கின்றனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலும், மதியத்திற்கு பிறகு இதமான கால நிலையும் நிலவுகிறது.

மேலும் இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்கிறது. சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

தற்போது மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கடும் பனிமூட்டமும் குளிரும் நிலவுகிறது.

குறிப்பாக குன்னூர், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. காலை நேரத்தில் வெயில் அடிக்கிறது. திடீரென பகல் வேளையில் நகர பகுதி பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.

பகல் வேளையே இரவு போல் காணப்படுவதால் சாலை முழுவதும் மறைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.

பனிமூட்டத்துடன் கடுமையாக குளிரும் வீசுகிறது. இதனால் பொதுமக்களும், அதிகாலையில் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகளும் சிரமம் அடைகின்றனர். குளிரில் இருந்து காத்துக்கொள்ள சிலர் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்வதையும் பார்க்க முடிகிறது.

மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரின் காரணமாக முக்கிய சாலைகளில் குறைந்த வாகனங்களே காணப்பட்டன. பனிமூட்டம், குளிர் நிலவினாலும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கின்றனர். காட்சி முனைகளை மட்டுமே அவர்களால் பார்க்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை காணப்படுகிறது.

அவ்வப்போது மாவட்டத்தில் மழையும் பெய்து வருவதால், குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News