தமிழ்நாடு

குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் - சுசீந்திரம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி.

தென் மாவட்டங்களில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை

Published On 2023-12-18 04:51 GMT   |   Update On 2023-12-18 06:51 GMT
  • மாவட்டம் முழுவதும் சராசரியாக 30 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கிறது.
  • தற்போது இலங்கைக்கு மேற்கு பகுதி மற்றும் குமரி கடலுக்கு தென்பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மிக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்யும் இந்த கனமழை 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதி கனமழையாக பெய்திருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை இன்று மாலை வரையில் தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது. சமவெளி பகுதிகளின் மீது பெய்துள்ள அதிகபட்ச மழையாகவும் இந்த மழை உள்ளது. அவலாஞ்சி பகுதியில் 92 செ.மீ. அளவுக்கு இதற்கு முன்பு பெய்ததைவிட அதிக மழை பெய்து இருக்கிறது. தற்போது காயல்பட்டினம் பகுதியில் அதே அளவு மழைப்பொழிவு காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் முழுவதுமே 112 செ.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

குறிப்பிட்ட பகுதிகள் என இல்லாமல் ஒரு மாவட்டம் முழுவதுமே இதுபோன்று இப்படி ஒரு மழைப்பொழிவு இருப்பது இதுதான் முதல்முறையாகும். மாவட்டம் முழுவதும் சராசரியாக 30 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் பெய்துள்ள அதிகபட்ச மழை அளவாகவும் இது இருக்கிறது. இந்த கனமழை தொடர்ச்சியாக பெய்வதற்கான சூழலே தற்போது வரை நீடிக்கிறது. காற்றழுத்த பகுதி தொடர்ந்து 24 மணி நேரமாக ஒரே பகுதியில் நீடிப்பதாலேயே மழை பொழிவும் அதிகமாக உள்ளது.

தற்போது இலங்கைக்கு மேற்கு பகுதி மற்றும் குமரி கடலுக்கு தென்பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. அது மேற்கு நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அது போன்று மேற்கு பகுதி நோக்கி நகர்ந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றால் மட்டுமே தென் மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் அடுத்த 12 மணி நேரத்துக்கு நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இவ்வாறு தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News