தமிழ்நாடு செய்திகள்

செங்கம் அருகே அரசு பஸ்-காய்கறி லாரி மோதல்- 3 பேர் பலி

Published On 2022-12-04 11:39 IST   |   Update On 2022-12-04 11:39:00 IST
  • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை- செங்கம் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ் சென்றது.
  • பஸ்சில் இருந்த பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை- செங்கம் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ் சென்றது.

பஸ்சை டிரைவர் மணிவாசகம் ஓட்டி வந்தார். செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் பஸ் சென்று கொண்டிருந்தது. முன்னாள் சென்ற லாரியை அரசு பஸ் முந்தி சென்றது.

அப்போது எதிரே வந்த பெங்களூரில் இருந்து பண்ருட்டிக்கு காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி மீது அரசு பஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சரக்கு லாரி கவிழ்ந்து காய்கறிகள் சாலையில் சிதறியது. பின்னால் வந்த லாரியும் பஸ் மீது மோதியது.

இதில் அரசு பஸ் டிரைவர் மணிவாசகம், காய்கறி லாரியில் வந்த லோடுமேன் ராஜேஷ் (35) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கம் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல்சிகிச்சைக்காக அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News