தமிழ்நாடு

பழனி மலைக்கோவிலில் தனது கணவருடன் சாமி தரிசனம் செய்த தமிழிசை.

சேவை செய்து வாழ்ந்தால் மன நிம்மதியை அடையலாம்- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2023-02-20 08:07 GMT   |   Update On 2023-02-20 08:08 GMT
  • அரசியலிலும், வாழ்க்கையிலும் தடுக்கி விழுந்தால் உடனடியாக எழுந்து விட வேண்டும்.
  • மனிதராக பிறந்தால் ஆளுனராக இருந்தாலும் சரி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

பழனி:

பழனியில் தனியார் நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழிசை என்று பெயர் வைத்ததால் நான் தமிழில் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றததால் தமிழில் பேசுகிறேன்.

அரசியலிலும், வாழ்க்கையிலும் தடுக்கி விழுந்தால் உடனடியாக எழுந்து விட வேண்டும். ஏனெனில் தடுக்கி விழுந்தது மிகப்பெரிய செய்தியாகி விடும். எனவே வீழ்ந்தே கிடக்காமல் உடனடியாக எழுந்து நமது பயணத்தை தொடர வேண்டும்.

ஆளுனராக இருந்தால் 4 சுவருக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. தெலுங்கானாவில் நன்கு படிக்கும் மாணவர் ஒருவர் தனக்கு லேப்டாப் இல்லாததால் உயர் படிப்பு தடைபடுவதாக கூறினார்.

அப்போது பழைய மாணவர்கள் யாரேனும் லேப்டாப் இருந்தால் தந்து உதவலாம் என அறிவித்தேன். அதனை ஏற்று ஒரு மாணவர் லேப்டாப் கொடுத்தார். அதனை படிப்பிற்கு தேவைப்பட்ட மாணவருக்கு வழங்கியதால் நல்ல மதிப்பெண்கள் பெற்றார்.

இதேபோல் ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி உள்ளேன். சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தால் எங்கிருந்தாலும் செய்யலாம். இதை நான் செய்தால் அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்வார்கள். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனரும் தேவையில்லை என்று கூறுவார்கள்.

மனிதராக பிறந்தால் ஆளுனராக இருந்தாலும் சரி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதுதான் எனது அடிப்படை கொள்கை.

இதுபோல் சேவை செய்து வாழ்ந்தால் கிடைக்கும் மனநிம்மதி சொல்லில் அடங்காதது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து தனது கணவருடன் பழனி மலைக்கோவிலுக்கு சென்ற தமிழிசை அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News