தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2023-12-16 07:11 GMT   |   Update On 2023-12-16 07:33 GMT
  • போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சையில் ஒரேநாளில் ஆசிரியை, தபால் ஊழியர் வீடுகளின் கதவை உடைத்து நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன் பற்றிய விவரம் வருமாறு ;-

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி கே.எம்.ஏ. உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 46). இவர் பொய்யுண்டார் கோட்டையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதேப்போல் தஞ்சை விளார்ரோடு நியுபாத்திமா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமதி (46). இவர் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார். பதறியடித்து பார்த்தபோது பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மகேஸ்வரி, கோமதி தனி தனியாக அளித்த புகார்களின் பேரில் தமிழ்பல்கலைக்கழகம் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது வீடுகளிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்தனரா ? அல்லது வேறு வேறு கும்பல் கொள்ளையடித்தனரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News