தமிழ்நாடு செய்திகள்

பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: டிரைவர்-கண்டக்டர் பலி

Published On 2022-07-30 09:35 IST   |   Update On 2022-07-30 09:35:00 IST

பெரம்பலூர்:

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரும்பு ராடு மற்றும் கம்பிகளை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கொணலை கிராமத்தை சேர்ந்த டிரைவர் பாலன் என்பவர் ஓட்டி வந்தார்.

அதேவேளையில், சென்னையில் இருந்து திருச் சிக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவுப்பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

அந்த பேருந்தில் டிரைவராக திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரை சேர்ந்த தேவேந்திரன் (48) டிரைவராகவும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள அய்யப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் (56) கண்டக்டராகவும் பணியில் இருந்தனர்.

அரசு பேருந்து இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட எல்லை பகுதியான சின்னாறு தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. லாரியில் இரும்பு கம்பிகள் இருந்ததால், அவை பேருந்தின் உள்பகுதிக்குள்ளும் புகுந்தது. அதிகாலையில் விபத்து நடந்ததும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். இந்த கோர விபத்தில் முன்னாள் அமர்ந்திருந்த டிரைவர் தேவேந்திரன், கண்டக்டர் முருகன் ஆகிய இருவரும் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பஸ் டிரைவர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, அதற்கு முன்பாக மற்றொரு வாகனம் சென்றுள்ளது. எனவே மீண்டும் வேகத்தை குறைத்து லாரிக்கு பின்னால் செல்ல முயன்றபோது அதன் பின்புறத்தில் மோதியுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News