தமிழ்நாடு

நகைக்கடை ஊழியரை வெட்டி 1½ கிலோ தங்கம் கொள்ளையில் 5 பேர் கைது

Update: 2023-03-24 05:54 GMT
  • நகைக்கடை வியாபாரி கமல்கிஷோர், தமிழ்மணி, பாலாஜி, சுகுமார், கிளிடாஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து கைதான 5 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பெரியபாளையம்:

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால். இவர் நெற்குன்றத்தில் தங்கநகை செய்து விற்கும் தொழிலும் அடகுகடையும் நடத்தி வருகிறார். இவர் வியாபாரிகளிடம் மொத்தமாக ஆர்டர் பெற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு ஊழியர்கள் மூலம் நகைகளை சப்ளை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கடை ஊழியர் சோகன், காலுராம் ஆகியோர் 1½ கிலோ தங்கநகை மற்றும் வசூலான ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி வந்தனர்.

வெங்கல் அருகே மாகரல்-காரணி கிராமத்துக்கு இடையே வந்த போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென நகைக்கடை ஊழியர்கள் சோகன், காலுராமை வழிமறித்து 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்த பையை பறித்தனர்.

இதனை தடுக்க முயன்ற சோகனை அரிவாளால் வெட்டி விட்டு கொள்ளையர் நகை-பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து ராமேஸ்வர்லால் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த கொள்ளை தொடர்பாக நகைக்கடை வியாபாரி கமல்கிஷோர், தமிழ்மணி, பாலாஜி, சுகுமார், கிளிடாஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து கைதான 5 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News