தமிழ்நாடு செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற அமுதேஸ்வரி, சினேகா, ஆறுமுகம் - (உள்படம்) மாரியம்மாள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை காணலாம்.

கடனை திருப்பி செலுத்தாததால் பிரச்சினை- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2023-06-21 13:32 IST   |   Update On 2023-06-21 13:32:00 IST
  • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுய உதவி குழு மூலம் வங்கியில் பெற்ற ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
  • வங்கி நிர்வாகம் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி மற்றும் 13 உறுப்பினர்களை தேடிச்சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவர் அப்பகுதி பெண்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுய உதவி குழு மூலம் வங்கியில் பெற்ற ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் வங்கி நிர்வாகம் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி மற்றும் 13 உறுப்பினர்களை தேடிச்சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது வங்கி ஊழியரிடம் அமுதேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கடன் தொகையை திருப்பி செலுத்தியதாகவும், வங்கியில் கடன் தொகையை செலுத்தாததற்கு குழு தலைவர் தமிழ்செல்வி தான் காரணம் என கூறியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு தலைவர் தமிழ்ச்செல்விக்கும், அமுதேஸ்வரி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக மனமுடைந்த அமுதேஸ்வரி (42), அவரது மகன் ஆறுமுகம் (20) மற்றும் அவர்களுடன் வீட்டில் வசித்துவந்த அண்ணி மாரியம்மாள் (60), கணவரின் தங்கை மகள் சினேகா (16) ஆகிய 4 பேரும் நேற்று இரவு உணவில் விஷத்தை கலந்து சாப்பிட்டனர். வீட்டில் மயங்கி கிடந்தவர்களை அருகிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News