தமிழ்நாடு செய்திகள்

நிலத்தரகர் கொலை வழக்கு: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் விடுதலை

Published On 2024-02-26 13:07 IST   |   Update On 2024-02-26 13:17:00 IST
  • வழக்கை விசாரித்த ஐகோர்ட் குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி அதை ரத்து செய்தது.
  • நிலத்தரகர் கொலை வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனை விடுதலை செய்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பளித்தார்.

சென்னை:

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி புவனேஸ்வரன் நிலத்தரகர் தொழில் செய்துவந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறு தொடர்பான பிரச்சனையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொளத்துார் போலீசார் சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையே, வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனின் தூண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய புவனேஸ்வரனின் தந்தை சிவா, குற்றப்பத்திரிகையில் ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதால், குற்றப்பத்திரிகையை ரத்துசெய்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட் குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ததுடன், டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய சி.பி.ஐ. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த 2020 முதல் நடந்து வந்த இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பிற்காக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நிலத்தரகர் கொலை வழக்கில் இருந்து தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனை விடுதலை செய்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News