யோக நரசிம்மர் - விநாயகர்
தமிழக கோவிலில் திருட்டுபோன மேலும் 5 பழங்கால சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
- திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவில் பழமையான பெரிய கோவில் ஆகும்.
- திருடுபோன 9 சிலைகளில், 5 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
சென்னை:
தமிழக கோவில்களில் திருடுபோன நிறைய சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகங்களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள். அவற்றை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் திருடுபோன 9 சிலைகளில் 5 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவில் பழமையான பெரிய கோவில் ஆகும். இதன் அருகே வேணுகோபால சுவாமி கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் இருந்த விஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய 3 சிலைகள் பாதுகாப்பு கருதி, விஸ்வநாத சுவாமி கோவிலில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 3 சிலைகளும் திருடு போய்விட்டன. உண்மையான சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதில் 3 போலியான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கிடையில் விஸ்வநாதசுவாமி கோவிலில் ஏற்கனவே உள்ள யோக நரசிம்மா், விநாயகர், நடனம் ஆடும் கிருஷ்ணர், நடனம் ஆடும் சம்பந்தர், சோமாஸ்கந்தர், நின்ற கோலத்தில் உள்ள விஷ்ணு ஆகிய 6 சிலைகள் உண்மையான சிலைகளாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அதுபற்றியும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த 6 சிலைகளும் போலியானவை என்பதும், உண்மையான சிலைகள் திருடுபோய் இருப்பதும் தெரியவந்தது.
இந்த 6 சிலைகளில் யோக நரசிம்மா், விநாயகர் ஆகிய 2 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டறிந்தனர். ஆக திருடுபோன 9 சிலைகளில், 5 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அவற்றை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கூறினார்கள். மீதம் உள்ள 4 சிலைகளும் அமெரிக்காவில்தான் உள்ளதா என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.