தமிழ்நாடு செய்திகள்
தூத்துக்குடியில் மீன்பிடித்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
- தூத்துக்குடியில் இருந்து 45 கடல் மைல் தூரத்தில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
- நேற்று இரவு செல்வா மயக்கமான நிலையில் மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்வா (வயது48). மீனவர். செல்வா சக மீனவர்கள் 4 பேருடன் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
அவர்கள் தூத்துக்குடியில் இருந்து 45 கடல் மைல் தூரத்தில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த செல்வா திடீரென கடலில் தவறி விழுந்தார்.
உடனடியாக சக மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கடலோர காவல் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு செல்வா மயக்கமான நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.