தீ விபத்தில் சேதமான கடைகளை காணலாம்
நெல்லை டவுன் வணிக வளாகத்தில் தீ விபத்து: 5 கடைகள் எரிந்து சேதம்
- 2 தீயணைப்பு லாரிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
- கடைகளின் ஷட்டர்களை உடைத்து உள்ளே இருந்த மேஜை, நாற்காலி, பார்சல்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வெளியே வீசி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் மணிப்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி(வயது 60). இவருக்கு சொந்தமான வணிக வளாகம் ஆர்ச் பகுதியில் இருந்து தெற்கு மவுண்ட் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையில் உள்ளது. அதில் சுமார் 10 கடைகள் உள்ள நிலையில் 3 கடைகளில் பார்சல் சர்வீஸ் சேவை கடைகளை முறையே அந்தோணி சேவியர், வேம்புராஜன், காளி ஆகிய 3 பேர் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அவர்கள் கடை ஷட்டரை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் அந்த கடைகளில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் சென்று பார்த்தபோது கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. அடுத்தடுத்து உள்ள 5 கடைகளில் தீ பரவி உள்ளது. இதனால் பேட்டை தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து 2 தீயணைப்பு லாரிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
கடைகளின் ஷட்டர்களை உடைத்து உள்ளே இருந்த மேஜை, நாற்காலி, பார்சல்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வெளியே வீசி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
இந்த விபத்து குறித்து சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். அந்த கடைகளுக்கு சோலார் பேனல் மூலமாகவே மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அதில் இருந்து மின்கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே யாரேனும் பீடி பற்றவைத்தபோது நெருப்பு பொறி பறந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த விபத்தில் லட்சக்கணக்கில் பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.