தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை தீவிரம்

Published On 2024-05-23 07:08 GMT   |   Update On 2024-05-23 07:08 GMT
  • தமிழகத்தில் கடந்த முறை கொரோனா தொற்று பரவியபோது இங்குள்ள மக்களிடம் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது.
  • கொரோனா தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையிலை.

கோவை:

கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் அனைத்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் 5 நாட்களும் சர்வதேச விமானங்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து சர்வதேச விமானம் மூலம் கோவை வரும் பயணிகளிடம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பரிசோதனை பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்துக்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தற்போது காய்ச்சல் பாதிப்புகளை கண்டறியும் வகையில் சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே தானியங்கி காய்ச்சல் கண்டறியும் எந்திர பரிசோதனைகள் செயல்பாட்டில் உள்ளன.

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக மத்திய-மாநில அரசுகள் இதுவரை பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா கூறுகையில், தமிழகத்தில் கடந்த முறை கொரோனா தொற்று பரவியபோது இங்குள்ள மக்களிடம் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்கு கொரோனாவை தடுக்கும் விதமாக, 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. எனவே கொரோனா தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையிலை. சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசு சார்பில் பிரத்யேக தகவல் வெளியாகும்பட்சத்தில் அவற்றின்படி கூடுதல் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News