தமிழ்நாடு

4-வது மதகின் கதவு பழுதானதால் வீணாக வெளியேறும் தண்ணீரை காணலாம்

ஊத்தங்கரை அருகே மதகின் கதவு பழுதானதால் வீணாக வெளியேறும் பாம்பாறு அணை தண்ணீர்- விவசாயிகள் கவலை

Published On 2022-09-01 03:53 GMT   |   Update On 2022-09-01 03:53 GMT
  • கடந்த ஒரு வாரமாக ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அணை நிரம்பி உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தன.
  • மதகின் இரும்பு ரோப் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை உள்ளது. இந்த அணையின் தண்ணீரை நம்பி மூன்றம்பட்டி, பாவக்கல் கொண்டம்பட்டி, நடுப்பட்டி, நாய்க்கனூர், அத்திப்பாடி, கொண்டம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி போன்ற ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் உள்ளனர்.

அதாவது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 4000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிக்கு இந்த அணையை நம்பியுள்ளன. மேலும் ஊத்தங்கரை பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக பாம்பாறு அணை உள்ளது.

இந்த அணையின் மொத்தம் 280 மில்லியன் கனஅடி கொள்ளளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியும். அணை உயரம் 19.60 அடி அளவு கொண்டு உள்ளது. அணை மற்றும் ஜவ்வாது மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவது காரணமாக அணையில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அணை நிரம்பி உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தன.

நேற்று இரவு பாம்பாறு அணையின் நான்காவது மதகின் இரும்பு ரோப் திடீரென பழுதடைந்தது. இதனால் மதகின் கதவு வழியாக அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் பாம்பாறு அணை தண்ணீர் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தாழ்வான பகுதியில் யாரும் இருக்க வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மதகின் இரும்பு ரோப் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மின்கசிவு காரணமாக இரும்பு ரோப் கயிருக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News