ஈரோடு இடைத்தேர்தல்- பிரேமலதா விஜயகாந்த், சீமான், விந்தியா இன்று பிரசாரம்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் இறுதி கட்ட பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
- 4-வது நாளாக பிரேமலதா விஜயகாந்த் இன்று மாலை கள்ளுக்கடை மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் இறுதி கட்ட பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2 நாட்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் 4-வது நாளாக பிரேமலதா விஜயகாந்த் இன்று மாலை 5 மணிக்கு கள்ளுக்கடை மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
அதனைத்தொடர்ந்து மரப்பாலம் பேபி மருத்துவமனை அருகே பேசுகிறார். பின்னர் மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, ராஜாஜிபுரம் பகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 2-வது கட்ட பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.
அதனைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மாலை சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் வரை சீமான் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா 3 நாள் பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.
இன்று 2-வது நாளாக மாலை எஸ்.கே.சி.ரோடு பகுதி, பெரிய வலசு, முனிசி பல் காலனி, அசோகபுரம், சின்ன மாரியம்மன் கோவில் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலகிருஷ்ணன் இன்று மாலை மரப்பாலம், கருங்கல்பாளையம், சம்பத் நகர் போன்ற பகுதிகளில் கை சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கிறார்.