தமிழ்நாடு

எர்ணாவூர் நாராயணன்

குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு

Published On 2022-09-28 04:55 GMT   |   Update On 2022-09-28 04:55 GMT
  • பெருந்தலைவர் காமராஜர் சீடராகவும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவராகவும், மக்கள் நலனுக்காகவும் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.
  • தமிழுக்கும் தமிழ் பெருமைக்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்தவர்.

சென்னை:

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி அரிகிருஷ்ணன்-தங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் குமரி ஆனந்தன்.

பெருந்தலைவர் காமராஜர் சீடராகவும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவராகவும், மக்கள் நலனுக்காகவும் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். இலக்கிய செல்வராகவும், மேடையில் தன் இலக்கிய நயம் மிக்க பேச்சால் மக்களை கவர்ந்தவர். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவராகவும் பணியாற்றியவர்.

தமிழுக்கும் தமிழ் பெருமைக்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்தவர். தான் வாழ்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் அவரது கோரிக்கையை முதல்வர் ஏற்று அண்ணாநகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி குமரி ஆனந்தனுக்கு பெருமை சேர்த்தார்.

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் டாக்டர் கலைஞர் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து உயிர் மூச்சாய் கடைசி காலம் முதல் பெருமை சேர்த்தாரோ, அதேபோன்று முதல்வரும் தமிழுக்கு பெருமை சேர்த்தது போல இலக்கிய செல்வருக்கு வீடு வழங்கும் அரசாணை பிறப்பித்து சிறப்பு சேர்த்துள்ளார். முதல்வருக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News