தமிழ்நாடு

குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும்- இலவச அரிசி முறைகேடாக செல்வதை தடுக்க நடவடிக்கை

Published On 2023-10-06 06:44 GMT   |   Update On 2023-10-06 07:56 GMT
  • அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக பெறப்படும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
  • கடந்த 2-ந்தேதியில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் ரேசன் கடைகளில் முன்னுரிமை குடும்ப அட்டைகள், அன்னயோஜனா குடும்ப அட்டைகளுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு சிலர் இலவச அரிசியை பெறுவது இல்லை. அந்த அரிசி முறைகேடாக வெளி மார்க்கெட்டுக்கு செல்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தற்போது புதிய உத்தரவு அனைத்து ரேசன் கடை பணியாளர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி முன்னுரிமை, அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக பெறப்படும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது குடும்பத்தில் ஒருவரின் ஆதார் எண் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளது. இனி குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் எண்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2-ந்தேதியில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதன்மூலம் இலவச அரிசி பெற்ற குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் இறந்தவர்கள், அரிசின் சலுகையை பெறாதவர்கள் விவரம் தெரியவரும். இதனால் அரசு வழங்கும் இலவச அரிசி விரயம் ஆகாமல் தடுப்பதோடு முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் ஆதார் பதிவு அவசியமாக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறும்போது, "இறந்தவர்கள் விவரங்களை கூறி பெயரை நீக்குவது இல்லை. சிலர் இலவச அரிசியை வாங்குவது இல்லை. ஆனால் அவர்களின் பெயரில் அரிசி வாங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க அனைவரின் ஆதார் எண்களையும் பதிவு செய்ய கூறுகிறோம். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வந்து பதிவு செய்து அரிசி, கோதுமையை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

கடந்த மாதத்தில் இருந்து ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை வாங்குவதற்கு யு.பி.ஐ. பணம் செலுத்தும் முறை நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. ரேசன் கடைகளில் உள்ள யு.பி.ஐ. எண்ணை பொதுமக்கள் தங்கள் செல்போனில் ஸ்கேனிங் செய்து பணம் செலுத்தலாம். இந்த வசதி சென்னையில் ஒவ்வொரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது.

Tags:    

Similar News