தமிழ்நாடு செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

ஈரோட்டில் இன்று ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4.37 லட்சம் பறிமுதல்

Published On 2023-02-15 14:55 IST   |   Update On 2023-02-15 14:56:00 IST
  • ஜி.எச்.ரவுண்டானா அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.

தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.44 லட்சத்து 23 ஆயிரத்து 370 பறிமுதல் செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பறக்கும் படை அலுவலர் மெய்யப்பன் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவரை நிறுத்தி சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 421 இருந்தது தெரியவந்தது. இது குறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் படைவீடு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (25) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததும் தெரிய வந்தது.

அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

இதேபோல் இன்று காலை ஜி.எச்.ரவுண்டானா அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி வந்து வந்தது. லாரியை சோதனை செய்தபோது ரூ.63,500 பணம் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது அவர் பெயர் செந்தில் (35) என்பதும், கரூரில் இருந்து ஈரோட்டிற்கு மணல் வாங்க வந்ததாகவும் கூறினார்.

ஆனால் அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News