தமிழ்நாடு

வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து முதியவர்-மூதாட்டி பலி

Published On 2024-04-19 07:14 GMT   |   Update On 2024-04-19 07:14 GMT
  • தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு ஓட்டு போட பழனிசாமி தனது மனைவியுடன் வந்தார்.
  • கை விரலில் மை வைத்த நிலையில் ஓட்டு எந்திரத்தின் அருகில் சென்றபோது திடீரென சின்னபொண்ணு மயங்கி விழுந்தார்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தர்மபுரி ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவர் இன்று காலை பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு ஓட்டு போட மனைவியுடன் வந்தார். அப்போது பழனிசாமி ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக மனைவி மற்றும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் பழனிசாமி அங்கேயே இறந்துவிட்டார் . இதனைப் பார்த்த மனைவி மற்றும் உறவினர்கள் கதறினர்.

இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியபோது பழனிசாமி இருதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையத்து முதியவர் பழனிசாமி உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மற்றொரு சம்பவம்...

சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 250-ல் கொண்டையம்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மனைவி சின்ன பொண்ணு (77) என்ற மூதாட்டி தனது மகன் கோவிந்தராஜ் என்பவருடன் வாக்களிக்க வந்தார். கை விரலில் மை வைத்த நிலையில் ஓட்டு எந்திரத்தின் அருகில் சென்றபோது திடீரென சின்னபொண்ணு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அந்த பகுதியினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News