பா.ஜனதா இல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி வியூகம்: 10 கட்சிகள் புதிய அணியில் சேர வாய்ப்பு
- தோழமை கட்சிகள் மற்றும் புதிய கட்சிகளுடன் அ.தி.மு.க. ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.
- அ.தி.மு.க. தலைமையில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் புதிய மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துள்ள அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்க அதிரடியாக தயாராகி வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார். பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட 9 கட்சிகளை புதிதாக அமைக்க உள்ள கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் பக்கம் இழுத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சியுடன் உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவரவும் அ.தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது.
அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். நீண்ட நாட்களாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறை கைதிகளின் விடுதலை தொடர்பான விஷயத்துக்காக தமிமுன் அன்சாரி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கும் நிலையில் இந்த சந்திப்பின்போது அதிகாரப்பூர்வமற்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனிதநேய ஜனநாயக கட்சி ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டுள்ளதால் அந்த கட்சி மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர தயாராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் இன்னொரு முஸ்லிம் கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சியும், அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதற்கு காய் நகர்த்தி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா போல அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அக்கட்சி ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இப்படி முஸ்லிம் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை கணிசமாக பெற்று விடலாம் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க. தலைமையில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் புதிய மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அது போன்ற ஒரு வலுவான கூட்டணியை அமைத்தால் மட்டுமே தி.மு.க. கூட்டணியை வீழ்த்த முடியும் என்று அ.தி.மு.க. நம்புகிறது.
இதன்படியே தோழமை கட்சிகள் மற்றும் புதிய கட்சிகளுடன் அ.தி.மு.க. ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் இந்த பேச்சுவார்த்தையை வெளிப்படையாகவே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பிறகு அ.தி.மு.க. தலைமையிலான புதிய கூட்டணி இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.