தமிழ்நாடு

அதிகாலையில் சென்னையில் நிலவும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு

Published On 2023-02-13 07:18 GMT   |   Update On 2023-02-13 07:18 GMT
  • கடந்த வாரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.
  • சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் அதிகாலை 5 மணி முதல் நடைபயிற்சியில் பொதுமக்கள் ஈடுபடுவார்கள்.

சென்னை:

பருவமழை காலம் முடிந்த போதிலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பனியும் குளிரும் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது.

தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்ட போதிலும் அதிகாலை வேளையில் ஒருசில மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

கடந்த வாரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் இன்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. சாலைகள் தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் இருந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

காலை 7 மணிவரை பனிப்பொழிவு இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தினார்கள். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நகரின் முக்கிய சாலைகள், வீதிகளில் மட்டுமின்றி பூங்காக்களிலும் பனிமூட்டம் காணப்பட்டதால் நடைபயிற்சி செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் அதிகாலை 5 மணி முதல் நடைபயிற்சியில் பொதுமக்கள் ஈடுபடுவார்கள். பனிமூட்டத்தின் காரணமாக நடைபாதையே தெரியாததால் வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

தலையை துணியால் முழுமையாக மூடியவாறு நடந்து சென்றனர். தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் அதிகம் பாதிக்கப்படுவதால் பனியில் வெளியே வருவதை தவிர்க்கின்றனர்.

Tags:    

Similar News