தமிழ்நாடு

நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும்: தி.மு.க. கவுன்சிலர்கள் கடிதம்

Published On 2023-12-07 07:59 GMT   |   Update On 2023-12-07 07:59 GMT
  • தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
  • கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளனர்.

மேயர் சரவணனுக்கும், பெரும்பான்மையான தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர். அவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தார்.

மேலும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசுவும் இரு தரப்பினரிடமும் பேசி மாநகராட்சி கூட்டத்தை சுமூகமாக நடத்த வலியுறுத்தினார்.

கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த 38 கவுன்சிலர்கள் நேற்று மாநகராட்சி கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவை சந்தித்து மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை வழங்கினர். ஆனால் அதனை வாங்க கமிஷனர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கடிதத்தை வாங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதால் அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு கமிஷனர் ஒப்புகை சீட்டு வழங்கினார்.

இத்தகவல் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவ் கூறும்போது, தி.மு.க. கவுன்சிலர்கள், மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விரைவில் மாமன்ற கூட்டத்தை கூட்டி விவாதம் நடத்தி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News