தமிழ்நாடு

வயதான தம்பதியின் வீட்டை தி.மு.க. பிரமுகர் காலி செய்தார்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவால் நடவடிக்கை

Published On 2023-09-02 09:35 GMT   |   Update On 2023-09-02 09:35 GMT
  • நீதிபதி பிறப்பித்த உத்தரவில் போலீஸ் படையை அனுப்பி ராமலிங்கத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • வீட்டை காலி செய்யும் இடத்தில் போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

சென்னை:

தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் உள்ள தனது வீட்டை கிரிஜா என்ற பெண் தி.மு.க. பிரமுகரான ராமலிங்கம் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.

சரியாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்யுமாறு வயதான தம்பதிகளான கிரிஜாவும் அவரது கணவரும் தெரிவித்தனர். ஆனால் ராமலிங்கம் வீட்டை காலி செய்யாமல் இருந்தார். கடந்த 13 ஆண்டுகளாக ராமலிங்கத்திடம் இருந்து வீட்டை பெற முடியாமல் இருந்த நிலையில் கிரிஜா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் 48 மணி நேரத்துக்குள் தி.மு.க. பிரமுகரை வாடகை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு உத்தரவிட்டார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில் போலீஸ் படையை அனுப்பி ராமலிங்கத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இன்று காலையில் வயதான தம்பதியின் வீட்டை நானே காலி செய்து விடுகிறேன் என்று ராமலிங்கம் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதன்படி அவர் வாடகை வீட்டில் உள்ள தனது பொருட்களை ஒரு வேனில் ஏற்றி வீட்டை காலி செய்தார். வீட்டை காலி செய்யும் இடத்தில் போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர். தாமாகவே முன்வந்து கோர்ட்டு உத்தரவை ஏற்று தி.மு.க. பிரமுகர் ராமலிங்கம் வீட்டை காலி செய்துவிட்டதால் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News