தமிழ்நாடு செய்திகள்

பத்மா

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி பெண் உடல் 3 மாதங்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published On 2022-11-20 15:08 IST   |   Update On 2022-11-20 15:08:00 IST
  • பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.
  • புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பத்மா. சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர். இதேபோல், கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார்.

2 பேரின் செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் இருவரும் நரபலிக்காக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கொச்சியை சேர்ந்த முகமது ஷாபி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.

அவர்கள் அங்கு சென்று அடையாளம் காட்டினர். இதையடுத்து பல்வேறு சட்டரீதியான நடவடிக்கைகள் முடிந்து இன்று பத்மாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பத்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News