தமிழ்நாடு

தசரா விழாவில் நடிகர்-நடிகைகள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-09-27 03:12 GMT   |   Update On 2022-09-27 03:12 GMT
  • தசரா திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகளையொட்டி, நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்கலாம். ஆபாசம் இருக்கக்கூடாது.
  • ஆபாசம் இருந்தால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

மதுரை:

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆபாசம் இன்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை நடத்த போலீசார் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று அம்பிகை தசரா குழு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் எம்.சி.சாமி, ராஜாராமன் ஆகியோர் ஆஜராகி, குலசேகரன்பட்டினம் திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. ஆனால் கலாசாரம் சார்ந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு கூட போலீசார் அனுமதிக்க முடியாது என வாய்மொழியாக தெரிவித்து வருகின்றனர். அம்மன் வரலாறு, பக்தி சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடிகர், நடிகைகள் மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆபாசம் இருக்காது. எனவே ஆபாசமின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும், என்று வாதாடினர்.

விசாரணை முடிவில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகளையொட்டி, நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்கலாம். ஆபாசம் இருக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சிகளை முழுவதும் சம்பந்தப்பட்ட தசரா குழுவினரே வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இதில் ஆபாசம் இருந்தால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News