தமிழ்நாடு செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தை புரட்டி போட்ட புயல்: குடியிருப்பு பகுதியில் வெள்ளம்- வாழைகள் நாசம்

Published On 2022-12-10 13:28 IST   |   Update On 2022-12-10 13:28:00 IST
  • விஷாரம், அருங்குன்றம் கிராமத்தில் 3 மின் கம்பங்கள், தென்னை மரங்கள் சாய்ந்தன.
  • ராணிப்பேட்டை மாவட்டத்தை மாண்டஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் இடைவிடாமல் மிக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

நேற்று நள்ளிரவு முதல் மாண்டஸ் புயல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோர தாண்டவம் ஆடியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

மேல் வீராணம் அருகிலப்பாடி போலிப்பாக்கம் ஆகிய இடங்களில் சாலையோரம் நின்ற பெரிய புளிய மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் வெட்டி அகற்றினர்.

வாலாஜா வீட்டு வசதிக்கு வாரிய குடியிருப்பு பகுதியில் பெரிய மரமொன்று சாய்ந்து விழுந்தது.

ஆரப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான வாழைகள் புயல் காற்றில் சாய்ந்து நாசமானது. நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 குடிசை வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.

அரக்கோணம், மின்னல், பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், ஆற்காடு பகுதியில் மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக மாவட்டத்தில் மின்னலில் 197 மில்லி மீட்டர் காவேரிபாக்கத்தில் 109 பனப்பாக்கத்தில் 195 அரக்கோணத்தில் 141 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இந்த பகுதியில் உள்ள ஏரிகள் ஏற்கனவே நிரம்பி உள்ளதால் மழை வெள்ளம் காரணமாக ஏரிகளில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 369 ஏரிகள் உள்ளன.இதில் 178 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. மேலும் 5 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. 58 ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. புயல் மழை காரணமாக இந்த ஏரிகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளன.

நெமிலி அருகே உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இது பற்றி தகவல் இருந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விஷாரம், அருங்குன்றம் கிராமத்தில் 3 மின் கம்பங்கள், தென்னை மரங்கள் சாய்ந்தன. பரவத்தூர் சாலையில் புளியமரம் சாய்ந்தது. இதனை அகற்றும் பணி நடந்தது.

பாணாவரம் அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் நேற்று இரவு வீட்டின் மீது பெரிய புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குமார் (வயது 69) அவரது மனைவி சத்யா மற்றும் மகன் சவுந்தர்ராஜன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தை மாண்டஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விவரம்:

ராணிப்பேட்டை- 18.40, அரக்கோணம்- 141.50, மின்னல்-197.80, ஆற்காடு- 66, காவேரிப்பாக்கம்-109, பனப்பாக்கம்-195.80, வாலாஜா-41.2, அம்மூர்- 14, பாலாறு அனைக்கட்டு-53.4, சோளிங்கர்-60.8, கலவை- 42.60.

Tags:    

Similar News