தமிழ்நாடு

கருமுட்டை விவகாரத்தில் பாதிப்பு- தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு கவுன்சிலிங்

Published On 2022-07-01 05:07 GMT   |   Update On 2022-07-01 05:07 GMT
  • சிறுமி தான் எங்கு தங்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அது குறித்த தகவலை நீதிமன்றத்தில் அறிக்கையாக வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
  • சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக்கொடுத்த ஜான் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.

ஈரோடு:

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் சென்னையை சேர்ந்த உயர்மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு, சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த சிறுமி வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் சட்ட சிக்கல் நிலவியதால் காப்பகத்திலேயே தொடர்ந்து சிறுமி தங்க வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி தான் கழிவறை சுத்தப்படுத்த பயன்படுத்தும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பதறிப்போன காப்பக ஊழியர்கள் உடனடியாக சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமிக்கு அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

இதையடுத்து சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் நேற்று காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமி மன அழுத்தத்தில் உள்ளதால் அவருக்கு 'கவுன்சிலிங்' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 2 நாளில் அவருக்கு 'கவுன்சிலிங்' வழங்கப்பட உள்ளது. அதில் சிறுமி தான் எங்கு தங்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அது குறித்த தகவலை நீதிமன்றத்தில் அறிக்கையாக வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக்கொடுத்த ஜான் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.

இதில் சிறுமியின் தாய், பெண் புரோக்கர் ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் ஈரோடு கிளை சிறையிலும் உள்ளனர்.

இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 4-ந் தேதி 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்துக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி மருத்துவப் பணிகள் குழு வரும் 4-ந் தேதி தனித்தனியே அந்தந்த சிறையில் குழுக்களாக பிரிந்து நேரடி விசாரணையில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News