தமிழ்நாடு செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை- பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 6 அடி உயர்வு

Published On 2023-07-07 09:51 IST   |   Update On 2023-07-07 09:51:00 IST
  • நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
  • மணிமுத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

தென்காசி:

தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு குற்றால அருவிகளுக்கும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக சில நேரங்களில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

நேற்றும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 49.2 மில்லிமீட்டரும், அடவி நயினார் பகுதியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

இதேபோல் கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, சிவகிரி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்கனவே 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

நேற்று 66 அடியாக இருந்து அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 5 அடி உயர்ந்து 71 அடியாகவும், நேற்று 50 அடியாக இருந்த ராமநதி நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று 54 அடியாகவும், 45 அடியாக இருந்த கடனாநதி நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 49 அடியாகவும், 32 அடியாக இருந்த கருப்பாநதி நீர்மட்டம் ஒரு அடியாக உயர்ந்து இன்று 33 அடியாகவும் உள்ளது.

இன்று அதிகாலை முதலே தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய 5 வட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் துரைரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், கொண்டாநகரம், சுத்தமல்லி, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

மாநகரில் இன்று காலை பெய்த சாரல் மழை காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மழையில் குடைபிடித்து சென்றனர்.

மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 143 அடி கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 53.50 அடியாக இருந்தது.

இன்று மேலும் 6 அடி உயர்ந்து 59.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 3,299.375 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 438.50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர் மட்டம் நேற்று 90 அடியாக இருந்த நிலையில் 2 அடி உயர்ந்து இன்று 92.10 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.94 அடியாக உள்ளது.

Tags:    

Similar News