தமிழ்நாடு செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடர்மழை- சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

Published On 2022-12-27 12:05 IST   |   Update On 2022-12-27 12:05:00 IST
  • தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணை பகுதிகளில் இன்றும் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது.
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

நெல்லை:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களாக மாநகர், புறநகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாநகர பகுதியை பொறுத்தவரை நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சாரல்மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழையால் மாநகர பகுதியில் உள்ள தொண்டர்சன்னதி, நயினார்குளம் சாலைகள் பள்ளங்களாக காட்சியளித்தது. அதில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதால் காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று 300 கனஅடி மட்டுமே நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து 1994 கனஅடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 100 அடியை கடந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 90 அடியாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 5.8 சென்டிமீட்டரும், பாபநாசத்தில் 4.7 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பை, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, களக்காடு, சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணை பகுதிகளில் இன்றும் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதியில் 39 மில்லிமீட்டரும், கடனா அணையில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 30 மில்லிமீட்டரும், சிவகிரியில் 14 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாமல் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் 2-வது நாளாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்று அந்த அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் இரவில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தூத்துக்குடியில் ரெயில்வே மேம்பாலம் சத்யா நகர் பகுதியில் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது.

தூத்துக்குடி மாநகர பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. அங்கு 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் கழுகுமலையில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. எட்டயபுரம், விளாத்திகுளத்தில் லேசான சாரல் அடித்தது. ஓட்டப்பிடாரம், சாத்தா ன்குளம், காயல்பட்டினம், கோவில்பட்டியிலும் சாரல் மழை பெய்தது.

Tags:    

Similar News